Education

ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

(மாணவர்களே! பெற்றோர்களே!! சமூக நலன் விரும்பிகளே!!! கட்டாயம் இதை வாசித்து பாருங்கள்)

இன்று ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றதை பலரும் ஊடகங்கள், சமூகவலைத் தளங்களினூடாக அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக பல தரப்பினரும் பல்வேறு விதங்களில் விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை முன்வைக்கின்ற பலருக்கு ஆசிரியர்களின் கோரிக்கை/ பிரச்சினை என்னவென்றே தெரியாது. நான் அறிந்தமட்டில் அவர்களின் கோரிக்கை மிக நியாயமானதே! (சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்ட சில விடயங்களை வைத்தே நானும் அவர்களின் கோரிக்கை என்னவென்று ஓரளவு தெரிந்து கொண்டேன்.)

அவர்களின் பிரதான கோரிக்கை 23 வருடங்களாக (1997 முதல்) ஏற்படுத்தப்பட்ட சம்பள அளவுத்திட்ட முரண்பாட்டை நீக்குமாறு என்பதாகும். *(எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சம்பளத்தை அதிகரிக்கத்தான் போராடுகிறார்கள் என்று. ஆனால் உண்மை அவ்வாறில்லை. அவர்களுக்கு உரித்தானதைத் தான் அவர்கள் கேட்கிறார்கள்)* அரச தொழிலில் அவர்களின் தொழிற்துறை/ சேவைத் துறைக்கேற்ப அவர்களின் சம்பள அளவுத்திட்டங்கள் மாறுகின்றன. அதேவேளை குறிப்பிட்ட ஒரு தொழிலிலே அவர்களின் தரங்கள், தொழில் காலங்களுக்கு ஏற்பவும் சம்பள அளவுத்திட்டங்கள் (Salary Scale) மாறுகின்றன. 1997 முதல் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடு காரணமாக உண்மையாக அவர்கள் பெற வேண்டிய தொகையைவிட குறைவான ஒரு தொகையைத்தான் 23 வருடங்களாக பெற்று வருகிறார்கள்.

இதை இன்னும் சற்று விரிவாக கூறுவதாயின், நீங்கள் ஒரு வீட்டை / கடையை வாடகைக்கு 23 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு கொடுத்துள்ளீர்கள். அவர் பொருந்திய தொகையைவிட 10% குறைவாக கடந்த 23 வருடங்களாக உங்களுக்கு தருகிறார். அதேநேரம் வாடகைத்தொகையும் 23 வருடங்களாகவும் ஒரே தொகையாகவும் இருக்காது. அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப வாடகைத் தொகையையும் நீங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வீர்கள். எனவே 23 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் அதைக் கேட்காமல் சும்மா விட்டு விடுவீர்களாக?? (உங்களுக்கு வரவேண்டிய அந்த தொகை வாடகைத் தொகை அதிகரிப்பிற்கேற்ப(வாடகைத் தொகையின் 10%) அதிகரித்துக்கொண்டே செல்லும்). இவ்வாறான ஒரு நிலைதான் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலுமொரு உதாரணம் கூறுவதாயின், நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகை மாதாந்த சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்தில்/ கடையில் 23 வருடங்களுக்கு முன் இணைந்துள்ளீர்கள். ஆனால் உங்கள் முதலாளி பொருந்திய தொகையைவிட குறிப்பிட்ட வீதம் (உதாரணத்திற்கு 10% என எடுத்துக்கொள்வோம்) உங்களுக்கு குறைவாக தருகிறார். இவ்வாறு 23 வருடங்களாக நடப்பதை நீங்கள் சும்மா விட்டுவிடுவீர்களா???

மேலும் கணித்தலுடன் கூறுவதாயின் உங்களது ஆரம்ப சம்பளம் 20,000/- வுடன் 23 வருடங்களுக்கு முன் ஒரு தொழில் இணைந்து உள்ளீர்கள். அதேவேளை 5 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் சம்பளம் 5,000/- வினால் அதிகரிக்கின்றது எனவும் வைத்துக்கொள்வோம். அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உங்களுக்கு வரவேண்டிய சம்பளம் 10% குறைவாகத்தான் கிடைக்கின்றது என வைத்துக்கொள்வோம்.

முதல் 5 வருடங்களில் நீங்கள் இழக்கும் தொகை 2000 × 12× 5= 120,000/-

அடுத்த 5 வருடத்தில் 2500× 12×5 = 150,000/-

அடுத்த 5 வருடத்தில் 3000 × 12×5= 180,000/-

அடுத்த 5 வருடத்தில் 3500 × 12×5 = 210,000/-

இறுதி 3 வருடத்தில் 4000× 12×3= 144,000/-

ஆகவே 23 வருடங்களில் நீங்கள் இழக்கும் மொத்த தொகை (120,000 + 150,000 + 180,000 + 210,000 + 144,000 ) *804,000/-*

இத்தொகையை சும்மா விட்டு விடுவீர்களா?? இப்ப சொல்லுங்கள் ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானதா? இல்லையா??

மேலே காட்டிய கணக்கு ஒரு உதாரணத்திற்கே. அதைவிட கூடுதலான தொகையை ஒவ்வொரு ஆசிரியர்களும் இழந்துள்ளார்கள். அத்தொகை அவர்களின் தரங்கள், தொழில் கால அளவுக்கு ஏற்ப வேறுபடுகின்றது. மேற்படி சம்பள அளவுத்திட்ட முரண்பாடு காரணமாக தற்போது ஒவ்வொரு ஆசிரியர்களும் அதிபர்களும் அவர்களின் தரங்களுக்கு ஏற்ப தாம் பெறவேண்டிய தொகையை விட சுமார் 9,000 – 31,000/- இடைப்பட்ட ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் குறைவாக பெறுகிறார்கள். *(ஒவ்வொரு மாதமும் அவர்களின் அத்தொகையை 23 வருடங்களாக மாறி மாறி வரும் அரசாங்கங்கள் சூரையாடியுள்ளது).* இந்த முரண்பாட்டை தான் நீக்குமாறு அவர்கள் வேண்டுகிறார்கள். *அதுவும் அவர்களுக்கு உரித்தான 23 வருடங்களாக சூரையாடப்பட்ட இலட்சக்கணக்கான பணத்தை தருமாறு அவர்கள் வேண்டவில்லை. மாறாக அடுத்த மாதத்திலிருந்து சரி இப்பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு உரித்தான சம்பளத்தை அடுத்த மாதம் தொடக்கம் சரியாக தருமாறுதான் வேண்டுகிறார்கள்.*

ஒரு ஆசிரியரின் FB பதிவொன்றிலிருந்து கிடைத்த தரவை மேலும் தெளிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.

அவ்வாசிரியர் 2011-08-19 ம் திகதி முதல் ஆசிரியராக நியமனம் பெற்றுள்ளார். அன்றிலிருந்து முதல் மூன்று வருடங்கள் (2014-08-19 வரை) ஒவ்வொரு மாதமும் 10,304/- குறைவாக கிடைத்துள்ளது. ஆகவே 3 வருடங்களில் அவர் இழந்த தொகை (3×12×10,304) *370,304/-*

2014-08-19 தொடக்கம் 2021-07-19 இம்மாதம் வரை 6 வருடங்களும் 11 மாதங்களும் ஒவ்வொரு மாதம் அவர் இழந்தது 14,315/- ஆகும். எனவே இவ் 83 மாதங்களில் அவர் இழந்த மொத்த தொகை (83× 14,315) *1,188,145/-*

ஆகவே அவருடைய நியமனம் முதல் இன்று வரை அரசாங்கங்கள் அவருக்கு வழங்க வேண்டிய அவர் இழந்த மொத்த தொகை *1,559,089/-* *(15 இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து எண்பத்து ஒன்பது ரூபா)*

அவ்வாசிரியர் அரசாங்கத்திடம் அந்த 15 இலட்சத்தை கேட்கவில்லை. அடுத்த மாதம் தொடக்கம் அவருக்கு உரித்தான 14,315/- வை சம்பளத்துடன் சேர்க்குமாறே!!

*இவற்றை முழுமையாக வாசித்து விளங்கியவர்கள் ஆசிரியர்களின் போராட்டத்தை இனி கொச்சைப்படுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன்.

அவர்கள் 23 வருடங்களாக இதற்காக போராடுகிறார்கள். மாறி மாறி வரும் அரசாங்கங்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். என்னுடைய பார்வையில் இனியும் அவர்களை இலகுவில் ஏமாற்ற முடியாது. அவர்கள் 23 வருடங்களாக ஏமாறி அனுபவம் பெற்றுள்ளார்கள்.

சிலர் இச்சந்தர்ப்பம் போராட பொருத்தமற்றது என்றும் இன்னும் சிலர் ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஓய்வு நேரம் அதிகமென்றும் ஆசிரிய தொழிலை கேவலப்படுத்துகிறார்கள். அதற்கான விரிவான பதிலை அடுத்த ஆக்கமொன்றில் எழுத முயற்சிக்கிறேன்.

இஃது
ஆசிரியர்களின் உன்னத சேவையை உணர்ந்த/ பெற்ற வெற்றியாளன்.

Fb.com/RazaMalhardeen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *